search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியார் பிறந்தநாள்"

    திருச்சி அருகே பெரியார் சிலையில் கைத்தடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #PeriyarStatue
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அல்லித்துறை பஸ் நிறுத்தத்தில் பெரியார் சிலை உள்ளது. கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த முழு உருவச்சிலை கடந்த 14.7.1991-ல் அமைக்கப்பட்டது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார்.

    இந்த சிலை அருகில் உள்ள கரும்பலகையில் அப்பகுதி திராவிடர் கழகத்தினர் தினமும் பெரியாரின் வாசகங்களை எழுதி வருவது வழக்கம். அதன்படி இன்று அதிகாலை 4.45 மணிக்கு வாசகங்களை எழுத, ஒன்றிய திராவிடர் கழக தலைவர் செபாஸ்டியான் என்பவர் அங்கு சென்றார்.

    அப்போது பெரியார் சிலையின் 5 அடி உயர கைத்தடி சிலையில் இருந்து உடைந்து விழுந்து கீழே கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், திராவிடர் கழக நிர்வாகிகளுக்கு தெரிவித்தார். இதனால் அங்கு பொதுமக்களும், திராவிடர் கழகத்தினரும் திரண்டனர்.

    இது குறித்து சோமரசம்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பெரியார் சிலையில் இருந்த கைத்தடியை வேண்டுமென்றே உடைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து செபாஸ்டியான் போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    பெரியார் சிலையில் சேதமான பகுதியை சீரமைக்கும் பணியில் திராவிடர் கழகத்தினர் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியார் பிறந்த நாளன்று சென்னையில் பெரியார் சிலையை அவமதித்த பா.ஜ.க.வை சேர்ந்த வக்கீல் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சியில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #PeriyarStatue
    சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்டித்து திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். #PeriyarStaue #DMK
    சென்னை:

    பெரியார் பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு இன்று அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர்.

    காலை 9 மணி அளவில் பெரியாருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் திரண்டு நின்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென பெரியார் சிலை மீது காலணிகளை வீசினார். இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் கூச்சல் போட்டனர்.

    அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை அங்கிருந்த அரசியல் கட்சியினர் சிலர் விரட்டிப் பிடித்தனர். பின்னர் அவரைச் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். இதில் அவர் நிலைகுலைந்தார். இதனை பார்த்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஓடிச் சென்று தாக்குதலுக்குள்ளான வாலிபரை கூட்டத்துக்குள் இருந்து வெளியில் கொண்டு வருவதற்கு முயன்றனர். ஆனால் உடனடியாக அவரை மீட்க முடியவில்லை.

    பின்னர் ஒருவழியாக கூட்டத்தினரின் பிடியில் இருந்து வாலிபரை வெளியில் கொண்டு வந்து போலீசார் அவரை பாதுகாப்பாக போலீஸ் வேனில் ஏற்றினர்.

    இருப்பினும் கார் கண்ணாடி வழியாக கையை விட்டு தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் காரை வெளியில் கொண்டு செல்ல போலீசார் முயன்றனர். ஆனால் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

    சுமார் ½ மணி நேர போராட்டத்துக்கு பின்னரே போலீசாரால் கூட்டத்துக்குள் இருந்து காரை வெளியில் எடுக்க முடிந்தது. பின்னர் மின்னல் வேகத்தில் கார் அங்கிருந்து சென்றது.


    இந்த நிலையில் காலை 10.30 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். அவரது தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.

    பெரியார் சிலையை அவமதித்த வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்பது போன்ற கோ‌ஷங்களை திருமாவளவன் எழுப்பினார். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    இதற்கிடையே பெரியார் சிலை மீது காலணியை வீசிய வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரது பெயர் ஜெகதீஸ். ஈக்காட்டுதாங்கலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். தென் சென்னை கூடுதல் கமி‌ஷனர் மகேஸ் குமார் அகர்வால் நேரில் சென்று விசாரணை நடத்தினார். 
    #PeriyarStaue
    ×